வனவிலங்குகளுக்கு உணவுகளை வீசிச்செல்லும் சுற்றுலா பயணிகள்


வனவிலங்குகளுக்கு உணவுகளை வீசிச்செல்லும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 7 Aug 2023 2:30 AM IST (Updated: 7 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகளுக்கு உணவுகளை வீசிச்செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகளுக்கு உணவுகளை வீசிச்செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

உணவுகளை வழங்க கூடாது

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வால்பாறை விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் செல்லும்போது, அந்த பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள், மான்கள், வரையாடுகளுக்கு உணவு பொருட்களை வழங்கி செல்கின்றனர். இதை தின்பதற்கு அவை சாலைக்கு வரும்போது, வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதை மீறும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவது குறைந்து இருந்தது.

வாகனம் மோதி குரங்கு சாவு

இந்த நிலையில் தற்போது மீண்டும் வனவிலங்குகளுக்கு உணவு வழங்கும் சம்பவங்கள் தலைதூக்கி உள்ளது. சாலையில் நின்று வனவிலங்குகளுக்கு உணவு வழங்கினால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதால், உணவுகளை சாலையில் வீசிச்செல்கின்றனர்.

அவற்றை தின்பதற்கு சாலைக்கு வந்து குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முகாமிட்டு உள்ளன. இதன் விளைவாக நேற்று முன்தினம் சாலையில் கிடந்த உணவுகளை தின்று கொண்டு இருந்த குரங்கு ஒரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. இதை கண்ட சக குரங்குகள் அந்த குரங்கை எழுப்ப முயற்சித்தன. இது காண்போரை கண் கலங்க செய்தது. இனிமேலும் வனவிலங்குகளுக்கு உணவுகளை வீசிச்செல்லும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.


Next Story