முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை ரசிக்க முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்


முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை ரசிக்க முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த படகு துறை, சேதம் அடைந்த நடைபாதை என முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். அங்கு வசதிகள் மேம்படுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

பழுதடைந்த படகு துறை, சேதம் அடைந்த நடைபாதை என முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். அங்கு வசதிகள் மேம்படுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அலையாத்திக்காடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடு தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சதுப்புநில காடாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர் ஆகும்.

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, பிச்சாவரம் அலயைாத்திக் காட்டை விட 10 மடங்கு பெரியது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்

இந்த அலையாத்திக்காட்டை முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் படகுகள் மூலம் தான் சுற்றிப்பார்க்க வேண்டும். 7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

வேர்கள் மூலம் சுவாசிக்கும் தன்மையுடைய அவி, சென்னியா, மெனரனா எனப்படும் தாவரம் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சதுப்பு நில காடுகளில் அதிகம் உள்ளன. கண்டல், தில்லை, சுரப்புன்னை, செரியோப்ஸ் டிக்கேன்ட்ரா வகை தாவரங்களும் முத்துப்பேட்டை சதுப்பு நில காடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

பறவைகளின் சொர்க்கபுரி

புவியியல் அமைப்பில் ஈரப்பத நிலப்பகுதியாக முத்துப்பேட்டை அலையாத்தி காடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு வருகின்றன. இந்த பறவைகள் சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன.

மேலும் பூ நாரை, செங்கால் நாரை, சிறவி, நீர்க்காகம் போன்ற நீர்ப்பறவைகளையும் இங்கு காணலாம். கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற பறவைகளையும் இங்கு அதிகமாக காணலாம். பருந்து, சிவப்பு வளைய பச்சைக் கிளிகள் மற்றும் புள்ளி புறா வகைகளும் இங்கு சிறகடித்து பறக்கின்றன. இதனால் பறவைகளின் சொர்க்க புரியாக அலையாத்திக்காடு உள்ளது.

நடந்து சென்று...

பாலுட்டி வகைகளான காட்டுப்பூனைகள், குறுகிய மூக்கு உள்ள பூசந்தின்னி வவ்வால்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. கீப் கார்னர் செல்லி முனை, லகடன் கடல் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகள் இந்த அலையாத்திக்காட்டில் உள்ள எழில்மிகு பகுதிகளாகும்.

சதுப்புநில காடுகளின் அழகை காணவரும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ஓய்விடங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதுபோல், இங்கு 162 மீட்டர் நீளத்திற்கு மரத்தினாலான நடை பாதைகள் அமைக்கப்பட்டு அதன் மேல் சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்று காடுகளின் அழகை ரசித்தனர்.

மேலும் ஓய்விடத்திலிருந்து சதுப்புநில காடுகளை காணும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சுற்றுலா பயணிகளை படகுகளில் ஏற்றி, எங்கும் இறங்காமல் மீண்டும் கரையில் கொண்டு வந்து விடுகின்றனர்.

வசதிகளை மேம்படுத்த வேண்டும்

அப்படி செய்யும் போது சுற்றுலா பயணிகள் அலையாத்திக்காட்டில் நடந்து சென்று இயற்கையின் அதிசயத்தை முழுவதுமாக ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த மரத்தாலான நடைபாதை, கண்காணிப்பு கோபுரங்கள், ஓய்விடங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இவற்றை உடனடியாக சரிசெய்து காட்டில் நடந்து சென்று பார்வையிடும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நிதி ஒதுக்க வேண்டும்

இதுகுறித்து ஜாம்வானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் கூறியதாவது:- முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை சுற்றுலாத்தலமாக அறிவித்தும், இதுவரை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இது வனப்பகுதியாக மட்டுமே உள்ளது. ஆகையால் தமிழக அரசு விரைவில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று ஜாம்புவானோடை பகுதியில் இருந்து தனியார் மீன்பிடி படகுகள் மூலம் அலையாத்தி காடுகளுக்கு செல்ல வேண்டும்.

பழுதடைந்த படகு துறை

இந்த நிலையில் தற்போது படகு துறை பழுதடைந்து ஆங்காங்கே இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. கைப்பிடி கூட இல்லாமல் பயணிகள் பாதுகாப்பற்ற நிலையில் படகுகளில் ஏறவேண்டிய நிலை உள்ளது. படகில் செல்லும் அனைவருக்கும் லைப்ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு இந்த பகுதியில் சுற்றுலாவுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story