டிராக்டர் கவிழ்ந்து விபத்து;உடல்நசுங்கி டிரைவர் சாவு


டிராக்டர் கவிழ்ந்து விபத்து;உடல்நசுங்கி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T16:00:21+05:30)

முறப்பநாடு அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

முறப்பநாடு அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

டிரைவர்

முறப்பநாடு அருகே உள்ள காசிலிங்கபுரத்தை மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் ராஜா (வயது50). டிராக்டர் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

இவர் முறப்பநாடு அருகே உள்ள கொம்புக்காரநத்தம் பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7மணிக்கு வயலில் வேலை முடித்துவிட்டு டிராக்டரை பொட்டலூரணி விலக்கிலிருந்து செக்காரக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.

பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது

கொம்புகாரநத்தத்தில் உள்ள ஒரு பால்பண்ணை அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் திடீரென்று நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராஜா டிராக்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவர் மீது டிராக்டர் விழுந்துள்ளது. இதில் டிராக்டர் நசுக்கியதில் ராஜா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் சம்பவ இடத்திற்கு சென்று ராஜா உடலை கைப்பற்றி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story