பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற வியாபாரி கைது

பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீரங்கம்:
பெண் கொலை
திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்குவாசல் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் மணல் பாங்கான இடத்தில் முட்புதருக்குள் கடந்த 11-ந் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண், டால்மியாபுரம் அருகே உள்ள முதுவத்தூரை சேர்ந்த செல்வி என்ற கலைச்செல்வி (வயது 35) என்பதும், இவருடைய கணவர் கடந்த 7 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது. மேலும் திருச்சி மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்த நாகராஜ் (53) என்பவருடன் கலைக்செல்விக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் தான் கலைச்செல்வியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வியாபாரி கைது
கல்லக்குடியை சேர்ந்த நாகராஜ் தள்ளுவண்டியில் வளையல், தோடு, மை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். அவர் வியாபாரத்துக்கு சென்றபோது கலைச்செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பழகி வந்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கலைச்செல்வி வேறொருவருடன் பழகி வந்துள்ளார். இதனால் அவர் மீது நாகராஜ் கோபத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று கலைச்செல்வியை கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் கலைச்செல்வி அவரிடம் இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






