கடனை அடைக்க நண்பர் வீட்டில் நகைகளை திருடிய வியாபாரி கைது
வெங்காய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைக்க நண்பர் வீட்டில் நகைகளை திருடிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
வெங்காய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைக்க நண்பர் வீட்டில் நகைகளை திருடிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
நண்பர்கள்
பொள்ளாச்சி அருகே டி.நல்லிகவுண்டம்பாளையம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதேபோன்று கஞ்சம்பட்டி கந்தசாமி செட்டியார் காலனியை சேர்ந்தவர் இந்திரராஜ்(33). இவர் வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் 2 பேரும், சிறுவயதில் இருந்தே நண்பர்கள் ஆவர். இதனால் நாகரத்தினம் வீட்டிற்கு அடிக்கடி இந்திரராஜ் சென்று வருவது வழக்கம்.
தொழிலில் நஷ்டம்
இந்தநிலையில் இந்திரராஜ் செய்து வந்த வெங்காய வியாபார தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கடன் அதிகரித்தது. இந்த கடனை அடைக்க என்ன செய்வது என்று எண்ணிய இந்திர ராஜ், தனது நண்பர் நாகரத்தினம் வீட்டில் இருந்து நகைகளை திருட திட்டமிட்டார்.
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த இந்திரராஜ் பீரோவில் இருந்த தங்க நாணயம், கைச்செயின், தங்க வளையல் என மொத்தம் 8 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றார்.
போலீசில் புகார்
இதையடுத்து வீடு திரும்பிய நாகரத்தினம், பீரோவில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கோப்பெருந்தேவி, சப்-இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வாக்குமூலம்
அப்போது, நாகரத்தினத்தின் வீட்டிற்கு அடிக்கடி வரும் நபர்கள் குறித்து கேட்டறிந்தனர். அதில் இந்திரராஜ் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர் நாகரத்தினம் வீட்டில் உள்ள தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் வெங்காய வியாபார தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைப்பதற்காக திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் இந்திரராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.