மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2023 8:30 PM GMT (Updated: 16 Oct 2023 8:31 PM GMT)

பொள்ளாச்சியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளநீர் வியாபாரி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனக்கு சொந்தமான 2 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார். ஒரு வீட்டில் மயிலாத்தாள் (வயது 65) என்பவரும், மற்றொரு வீட்டில் இளநீர் வியாபாரி ராமசாமி (70) என்பவரும் குடியிருந்து வந்தனர். தனித்தனி வீடுகளில் வசித்தாலும், அவர்கள் பொதுவான கழிப்பறை, குளியல் அறையை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வபோது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று காலையில் ராமசாமி, மயிலாத்தாள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ராமசாமி ஆத்திரம் அடைந்து, இளநீர் வெட்ட பயன்படுத்தும் அரிவாளை எடுத்து, மயிலாத்தாளை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவர் இறந்து விட்டதாக கருதிய ராமசாமி தனது வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

தீவிர சிகிச்சை

இதற்கிடையில் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயங்களுடன் மயிலாத்தாள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார், ராமசாமியை விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் கதவை திறக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

விசாரணை

அப்போது ராமசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story