வணிகர்கள் எடுத்துச் செல்லும் பணத்தை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கோரிக்கை


வணிகர்கள் எடுத்துச் செல்லும் பணத்தை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கோரிக்கை
x

கோப்புப்படம் 

வணிகர்கள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்துச் செல்லும் வகையில் மாதிரி நடத்தை விதியில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயித்துள்ளது. இது வணிகர்களையும், பொது மக்களையும் கடுமையாக பாதிக்கிறது. ஏப்ரல் 19 வரை வணிக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். திருமணம் உள்ளிட்ட சில சமூக காரியங்களும் தடைபடுவதாகவும் தகவல் வருகின்றன.

வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டு வரும் இடையூறுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, வழிப்பயணத்தில் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துச் செல்லும் வகையில் மாதிரி நடத்தை விதியில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story