1,350 ஏக்கரில் பாரம்பரிய விவசாயம்


1,350 ஏக்கரில் பாரம்பரிய விவசாயம்
x
தினத்தந்தி 13 July 2023 12:27 AM IST (Updated: 14 July 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,350 ஏக்கரில் பாரம்பரிய விவசாய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய விவசாயம்

நிலையான உற்பத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கை வளபாதுகாப்பு மற்றும் மண் வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டு பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டம் குழுவாக 1,000 ஏக்கர் மற்றும் தனி விவசாயிகளுக்கு 350 ஏக்கர் என மொத்தம் 1,350 ஏக்கரில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்தோ அல்லது அருகிலுள்ள கிராமங்களிலுள்ள குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்தோ 50 ஏக்கர் கொண்ட தொகுப்பை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

மானியம்

இத்திட்டத்தில் 2.5 ஏக்கருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500, இரண்டாம் ஆண்டு ரூ.17,000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ.16,500 என மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மற்றொரு துணை திட்டமாக ஏற்கெனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள், வேறு எந்த திட்டத்திலும் பயன் பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக இத்திட்டத்தில் 2.5 ஏக்கருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 மானியம் வழங்கப்படும்.

பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1,000, குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ.1,500, மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.700, பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ.12,000 மற்றும் விளம்பர செலவினங்களுக்கு ரூ.1,300 என மொத்தம் 2.5 ஏக்கருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500 மானியம் வழங்கப்படும்.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story