மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 July 2023 10:15 PM GMT (Updated: 26 July 2023 10:15 PM GMT)

நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டி காந்தல் பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி அடுத்த எம்.பாலடாவில் இருந்து மேல்கவ்வட்டி செல்லும் சாலையில் சண்முகம் என்பவரது வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடு இடிந்து சேதமடைந்தது. மேலும் அப்பகுதியை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் விழும் நிலையில் இருப்பதால், அந்த மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட பிக்கட்டி சிவசக்தி நகரில் பிரவீதா என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. தொடர்ந்து நிவாரண தொகையாக ரூ.4,500 வழங்கப்பட்டது. கூடலூர், பந்தலூர் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர். கூடலூர், நடுவட்டம் பகுதியில் தொடர் மழையால் மாயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில் உள்ள பாடந்தொரையில் நேற்று மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார், கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 45 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

பனிமூட்டம்

இதேபோல் ஊட்டியில் இருந்து மஞ்சனக்கொரை செல்லும் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொன்னானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆற்றோரத்தில் இருந்த மரம் முறிந்து மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பி அறுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஊட்டியில் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை ஓட்டினர். நீலகிரியில் தொடர் மழையால் நேற்று 2 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. மேலும் 4 இடங்களில் மரங்கள் விழுந்தன.

மழையளவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-5, கிளன்மார்கன்-19, நடுவட்டம்-16, அவலாஞ்சி-24, அப்பர்பவானி-17, தேவாலா-11, செருமுள்ளி-10, பாடந்தொரை-6, ஓவேலி-8.


Next Story