மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 8:15 PM GMT (Updated: 1 Oct 2023 8:16 PM GMT)

கூடலூர்- கேரள சாலையில் மூங்கில்கள் விழுந்து 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி


கூடலூர்- கேரள சாலையில் மூங்கில்கள் விழுந்து 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூங்கில்கள் விழுந்தன

கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள 4-ம் மைல் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மூங்கில்கள் நேற்று மாலை 3.30 மணிக்கு சாய்ந்து விழுந்தது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் கூடலூர் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூங்கில்களை மின் வாள்கள் கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது மின் வாள் கொண்டு உடனடியாக அனைத்து மூங்கில்களையும் வெட்டி அகற்ற முடிய வில்லை. இருப்பினும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, மூங்கில்களை சாலையோரம் தள்ளி வைக்கும் பணி நடைபெற்றது. முன்னதாக தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர்.

பின்னர் மூங்கில்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்களது ஊர்களுக்கு மிக தாமதமாக புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கசிவு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நெற்பயிர்களுக்கு ஏற்ற பாசன வசதி கிடைத்து உள்ளது. இதனால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story