வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் கந்தனேரியில் நடக்கும் தி.மு.க. பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.
இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் தென்கடப்பந்தாங்கல், முத்துக்கடை, பெல், திருவலம், சேர்க்காடு, ஆந்திரா நரகரிபேட்டை, கிறிஸ்டியான்பேட்டை, காட்பாடி குடியாத்தம் கூட்ரோடு, கே.வி.குப்பம், குடியாத்தம் நான்குமுனை சந்திப்பு, நேதாஜி சவுக், உள்ளிகூட்ரோடு, மாதனூர் வழியாக செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள்
பலமநேர் பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் சைனகுண்டா சோதனை சாவடி, குடியாத்தம் நான்குமுனை சந்திப்பு, கே.வி.குப்பம், காட்பாடி குடியாத்தம் கூட்ரோடு, கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி, காட்பாடி குடியாத்தம் கூட்ரோடு, கிறிஸ்டியான்பேட்டை சோதனைசாவடி, ஆந்திரா நரகரிபேட்டை, சேர்க்காடு, திருவலம், பெல், முத்துக்கடை, தென்கடம்பந்தாங்கல் வழியாக செல்ல வேண்டும்.
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை, ஸ்ரீபுரம் கூட்ரோடு, மூலக்கேட், அணைக்கட்டு, அகரம், மாதனூர் வழியாகவும், திருவண்ணாமலையில் இருந்து சித்தூர் செல்லும் கனரக வாகனங்கள் ஆரணி, திமிரி, ஆற்காடு, முத்துக்கடை, திருவலம், சேர்காடு, ஆந்திரா நரகரிபேட்டை வழியாகவும் செல்ல வேண்டும்.
ட்ரோன்கள் பறக்க தடை
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் அருகே உள்ள தனியார் ஓட்டல், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் கந்தனேரி ஆகிய பகுதிகள் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.