ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
தளவாய்புரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராஜபாளையம்,
தளவாய்புரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர் ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் நகரில் உள்ள முக்கிய சாலைகள், காமராஜ் நகர், தளவாய்புரம் பஸ் நிலையம், செட்டியார்பட்டி, அரசரடி பஸ் ஸ்டாப், முகவூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போலீசார் தடை
தளவாய்புரத்திலிருந்து முகவூர் வரை அரிசி ஆலைகள், ஜவுளி கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் என அனைத்து வகையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்கிறது. மேலும் தளவாய்புரத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் லாரிகள், வேன் போன்ற வாகனங்களை வரிசையாக நிறுத்துகின்றனர். இப்பகுதியில் பள்ளிகள் இருப்பதால் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.
நடவடிக்கை
இப்பகுதியில் பல்வேறு தொழில்கள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளதால் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக போலீசார் நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மெயின் சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதித்து சீரான போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.