சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகரில் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வால்பாறை
வால்பாறை நகரில் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாறுமாறாக வாகனங்கள்
வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தபால் நிலையம் அருகே குறுகலான பகுதி உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த இடத்தில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் தவிப்புக்கு ள்ளாகி வருகின்றனர்.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சார்பில் பல நாட்களாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த சாலையோரத்தில் வழக்கம்போல் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது எதிர் எதிரே வந்த அரசு பஸ்சும், தனியார் லாரியும் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இருபுறமும் நீண்ட நேரம் வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேரம் ஒதுக்கீடு
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
தபால் நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை தீயணைப்பு நிலையம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு வரும் லாரிகள் சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே லாரிகள் நகருக்குள் வர நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் தீயணைப்பு நிலைய பகுதியில் தனியார் வாகனங்களை நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.