பில்லூர்- சேர்ந்தனூர் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பில்லூர்-சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்பெண்ணையாற்றில் தற்போது மழைநீர் பெருகெடுத்து ஓடுகிறது. மேலும் திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் திறக்கப்படட உபரி நீரால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக தென்பெண்னையாற்றின் கிளை ஆறான மலட்டாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விழுப்புரம் அருகே பில்லூர்- சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால்.அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பானம்பட்டு வழியாக பண்ருட்டிக்கு சென்று வருகின்றனர்.
மேம்பாலம் கட்ட வேண்டும்
இதனால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பொருட்படுத்தாமல் சிலர் அதன் வழியாகவே சென்று வருகின்றனர். இதனால் அங்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.