சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம்; கலெக்டர் தகவல்


சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம்; கலெக்டர் தகவல்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் திருவூடல் தெரு-பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வடஒத்தவாடைத் தெரு வரையில் உள்ள சாலையில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சாலை பணி முடியும் வரை அப்பகுதி சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இதனால் தண்டராம்பட்டு மற்றும் மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சிலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்திநகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். பேகோபுரத் தெரு வழியாக நகரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்திநகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

தேரடி தெருவில் இருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்திசிலை, பூத நாராயணப் பெருமாள் கோவில், சின்னக்கடைத் தெரு வழியாக செல்ல வேண்டும்.

செங்கம் சாலையில் இருந்து திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கம் சாலை சந்திப்பில் இருந்து கிரிவலப்பாதை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். எனவே, சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.


Next Story