முடக்குச்சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம்


முடக்குச்சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம்
x

மதுரை முடக்குச்சாலை பகுதியில் போக்குவரத்து இன்று(திங்கட்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை

மதுரை முடக்குச்சாலை பகுதியில் போக்குவரத்து இன்று(திங்கட்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மேம்பாலப்பணிகள்

மதுரை முடக்குச்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே 1,190 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முடக்குச்சாலை சந்திப்பில் கான்கிரீட் பில்லர்களில் உத்திரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக முடக்குச்சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை போக்குவரத்து போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை நகரில் இருந்து முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு வழியாக வெளியூர் செல்லும் பஸ்கள், கனரக, இலகுரக வாகனங்கள், இருசக்கரம், ஆட்டோ, 4 சக்கர வாகனங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி மதுரை நகரில் இருந்து வரும் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் முடக்குச்சாலை சந்திப்பில் உள்ள ஓட்டல் முன்பு பில்லர்-3, 4-க்கு இடையில் வலதுபுறமாக திரும்பி மேலக்கால் சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி கோச்சடை, துவரிமான் நான்குவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

நான்கு வழிச்சாலை

மதுரை நகரில் இருந்து வெளியூர் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட அரசு நகர் பஸ்கள் (பஸ் ரூட் நம்பர்.21) மட்டும் காளவாசல் சந்திப்பு, சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ். காலனி பிரதான வீதி எச்.எம்.எஸ் காலனி சந்திப்பு, விராட்டி பத்து, அச்சம்பத்து வழியாக செல்ல வேண்டும். நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து, விராட்டிபத்து, டோக் நகர், முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வரலாம். நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக பஸ்கள், கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக துவரிமான், கோச்சடை, முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story