சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு


சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
x

கரூர் ேகாவைரோடு- ஜவகர்பஜார் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

கோைவ சாலை

கரூர் மாநகரின் முக்கிய சாலையாக கோவை சாலை உள்ளது. கரூரை பொறுத்தவரை கோவை சாலை பகுதி அதிகளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த சாலையில் மனோகரா கார்னர் முதல் திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள், பிராண்டட் ஷோரூம்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள், டி.வி., செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூம்கள், பேக்கரி, திருமண மண்டபங்கள், மருத்துவமனை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோவை சாலையில் சென்று வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் சேலம், பெங்களூருர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கொடுமுடி, காங்கேயம், திருப்பூர், கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் பஸ்நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும் கோவை சாலை வழியாகதான் வருகின்றன. மீண்டும் அதே சாலை வழியாகதான் அந்த பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. இதேபோல் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் இவ்வழியாக தான் சென்று வருகின்றன.

போக்குவரத்து அதிகம்

இதனால் கோவை சாலை இருபுறங்களிலும் எப்போதும் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும். கோவை சாலையில் இருக்கும் நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தங்களின் தேவையான பொருட்களை வாங்க தினமும் சென்று வருகின்றன. இந்த கடைகளுக்கு நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை அந்தந்த நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள் முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றன.

இதில் இருசக்கர வானங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் பார்க்கிங் செய்யும் இடங்களை தாண்டி வாகனங்களை சாலையில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாலை நேரங்களில் கடைகளின் முன்பு உள்ள சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

நெரிசல்

மேலும் கடைகள், நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வரும் சரக்கு வாகனங்களையும் சாலையில் நிறுத்தி பொருட்களை இறக்குவதாலும் கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ்களிலும் செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

இதனால் மாநகராட்சி சார்பில் கரூர்-கோவை சாலையில் பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தும்போது ஜவுளி, நகை கடைகள், ஷோரூம்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வார்கள். இதனால் கோவை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஜவகர்பஜார்

இதேபோல் கரூரில் முக்கியமான பகுதியாக ஜவகர்பஜார் உள்ளது. இந்த பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பேன்சி ஸ்டோர், ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. கரூர் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பொருட்களை வாங்கி செல்லும் முக்கிய பகுதியாக இருக்கிறது.

மேலும் ஜவகர்பஜாரில் தீபாவளி, பொங்கல் மற்றும் திருவிழா காலங்களில் ஜவுளி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்துவிடுவார்கள். ஜவகர்பஜார் பகுகுதியில் அன்றைய காலக்கட்டத்தின் அடிப்படையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை, வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. தற்போது நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது.

பார்க்கிங் வசதி

இதனால் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்தவதால் போக்குவரத்து இடையூறு அதிகளவில் ஏற்படுகிறது. எனவே ஜவகர்பஜார் வரும் பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல் அனைத்து நாட்களிலும் ஜவகர்பஜாருக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பொதுவான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கரூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

நிம்மதியாக இருக்கும்

கரூரை சேர்ந்த கார்த்திகேயன்:-

கரூர் ஜவகர்பஜார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் கட்டி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள காலத்தில் மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. மேலும் வீட்டுக்கு ஒரு கார். இரண்டு பைக்குகள் வீதம் உள்ளது. இவர்கள் பஜார் பகுதியில் பொருட்களை வாங்க வருகின்றபோது தங்களது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஒவ்வொரு கடையின் முன்பு நிறுத்துவதும் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே கரூரில் மையப் பகுதியில் பார்கிங் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் குடும்பத்துடன் பொருட்களை வாங்கி செல்வது எளிதாக இருக்கும்.

மாநகராட்சியாக...

கரூரை சேர்ந்த அருள்முருகன்:-

கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அதிக அளவில் கடைகள் உள்ளன. இதனால் தினமும் மக்கள் அதிக அளவில் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். இது தவிர கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களுடைய இரண்டு சக்கர வாகனங்களை பஜாரில் உள்ள கடைகளின் முன்னால் நிறுத்துகின்ற சூழ்நிலை உருவாகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நிலை உள்ளது. கரூர் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்ந்து நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. எனவே வாகனங்களை நிறுத்த தனிபாா்க்கிங்க வசதிசெய்து கொடுத்தால் எளிதாக இருக்கும்

கட்டணம் வசூல் செய்யலாம்

கரூர் அண்ணாநகரை சேர்ந்த மணிவண்ணன்:-

நாங்கள் கரூர்- கோவை சாலையில் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறோம். கோவை சாலையானது தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நிறைய உள்ளன. இதனால் தினமும் அதிக அளவில் மக்கள் குடும்பத்துடன் பொருட்களை வாங்க வந்து செல்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. எனவே கோவை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் தனியாக பார்க்சிங் செட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும், அதற்காக அவர்களிடம் குறைந்த அளவில் கட்டணம் கூட வசூல் செய்யலாம். இது மாநகராட்சிக்கு ஒரு வருவாய் கூட ஈட்டிக் கொடுக்கும்,

திட்டமிட்டு செயல்பட வேண்டும்

வாங்கப்பளையத்தை சேர்ந்த வசந்தகுமார்:-

கரூர் மாநகராட்சியான 100 ஆண்டு கால பழமையான நகராட்சி. அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்டு வசதி ஏற்படுத்தப்பட்டது தான். தற்போது உள்ள போக்குவரத்துக்கு ஏற்ப திட்டமிடல் கிடையாது. கரூரை பொறுத்தவரை முதலில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால் தான் ஜவகர்பஜாரில் இருந்து மனோகரா கார்னர் வரையும், கோவை சாலை பகுதியும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பயன்பெறும் வகையில் திட்டமிட்டு பார்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும். அந்த காலக்கட்டத்தின் நகராட்சியின் வசதியோடுதான் வாழ்ந்து வருகிறோம். எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story