பாலாறு வழியாக தமிழகம் - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்
பாலாற்றங்கரையில் மீனவர் ராஜா சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தமிழகம் - கர்நாடக எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்கு கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) ஆகியோர் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மீனவர்கள் ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பி வந்துவிட்டனர். ராஜா என்பவருடைய நிலை மட்டும் என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ராஜா இன்று சடலமாக மீட்கப்பட்டார். இதனால், இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலாறு வழியாக தமிழகம் - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.