மோட்டார் சைக்கிளில் 2¼ கிலோ கஞ்சா கடத்தல்; தந்தை-மகன் கைது
மோட்டார் சைக்கிளில் 2¼ கிலோ கஞ்சா கடத்தியதாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாநகர போலீசார் தற்போது கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் கஞ்சா விற்பனை, பதுக்கலை தடுத்து வருகிறார்கள். இருப்பினும் கஞ்சா விற்பனை குறைந்தபாடில்லை. மறைமுகமாக கஞ்சா விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில் திருச்சி சுப்ரமணியபுரம் வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசுமதி தலைமையிலான போலீசார் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தந்தை-மகன் கைது
அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் 2¼ கிலோ கஞ்சா கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தவர்கள் திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த பாபு (வயது 62), அவருடைய மகன் குமரன் (35) என்பதும், அதேபகுதியை சேர்ந்த டக்கர் என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2¼ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும், டக்கரை வலைவீசி தேடி வருகிறார்கள்.