சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் சோகம்; மராட்டிய மாணவர் தற்கொலை


சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் சோகம்; மராட்டிய மாணவர் தற்கொலை
x

சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை மூலம் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஐ.ஐ.டி.யில் படித்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி கொரோனா காலத்தில் மர்மமாக இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது. அடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஸ்ரீவத் சன்னி என்ற ஆராய்ச்சி படிப்பு மாணவரும் சரியாக படிக்க முடியவில்லை என்று தூக்கில் தொங்கிவிட்டார். அதே நாளில் கர்நாடகத்தைச் சேர்ந்த வீரேஷ் என்ற மாணவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை விட முயற்சித்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார். தற்போது அவர் படிப்பை தொடர்கிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரும் சரியாக படிக்க முடியவில்லை என்றுதான் இந்த சோக முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

மராட்டிய மாணவர்

உயிரிழந்த மாணவர் பெயர் கேத்தார் சவுக்லே (வயது 20). இவர் ஐ.ஐ.டி.யில் 2-வது ஆண்டு பி.டெக் படித்துவந்தார். அங்குள்ள காவேரி விடுதியில் தங்கியிருந்தார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது அறைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கோட்டூர்புரம் போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர், மாணவர் தூக்கில் தொங்கிய விடுதி அறைக்கு போலீஸ் படையுடன் விரைந்துவந்தனர். மாணவரின் உடல் தூக்கில் இருந்து இறக்கப்பட்டது. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காதல் தோல்வியா?

காதல் தோல்வியால் மாணவர் கேத்தார் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மனஉளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது. 4-வது செமஸ்டருக்கு மேல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தனது நண்பர்களிடம் அந்த மாணவர் கூறியதாக தெரிகிறது. மாணவர் கேத்தார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்தடுத்து மாணவர்களின் உயிரிழப்பை சந்திக்கும் ஐ.ஐ.டி. வளாகம் கதிகலங்கி போய் உள்ளது. இதை தடுக்க அந்த நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.


Next Story