குடும்பத்தகராறில் விபரீதம்: விவசாயி உயிரோடு எரித்துக்கொலை; மகன் கைது


குடும்பத்தகராறில் விபரீதம்: விவசாயி உயிரோடு எரித்துக்கொலை; மகன் கைது
x

அருப்புக்கோட்டை அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 63). விவசாயி. இவரது மகன் குருமூர்த்தி(32). இவர் வாழ்வாங்கியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாக்யராஜ் புதிய டிராக்டர் வாங்கி தனது மகன் குருமூர்த்தி பொறுப்பில் ஒப்படைத்து உள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தினமும் ரூபாய் ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மீதி வருமானத்தை தன்னிடம் தருமாறு பாக்யராஜ் கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக பணம் தராததால் பாக்யராஜ், குருமூர்த்தியிடம் போன் மூலம் பணத்தை கேட்டுள்ளார்.

தந்தை மீது பெட்ரோல் ஊற்றினார்

இதற்கு குருமூர்த்தி பணம் தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குருமூர்த்தி, தந்தை வீட்டிற்கு சென்று, 'பெற்ற மகனிடமே கணக்கு போட்டு பணம் கேட்கிறாயா, டிராக்டர் வாங்கி தருவது உனது கடமைதான் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி, தந்தை என்றும் பாராமல் கையில் கொண்டு வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றினார்.

பின்னர் அவர் உடலில் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். உடலில் தீப்பற்றியதில் படுகாயம் அடைந்த பாக்யராஜை அவரது உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மகன் கைது

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்துபந்தல்குடி போலீசார்வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story