கொளத்தூர் அருகே, மிளகாய் பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்: மழைக்கு ஒதுங்கிய போது குடிசை சரிந்து பெண் சாவு
கொளத்தூர் அருகே தோட்டத்தில் மிளகாய் பறிக்க சென்ற இடத்தில் குடிசை சரிந்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
மேட்டூர்:
கூலி தொழிலாளர்கள்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய தோட்டத்தில் விளைந்து இருந்த மிளகாய்களை பறிப்பதற்காக சத்யாநகர் காலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு சென்று இருந்தனர். மதியம் 3 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. உடனே தொழிலாளர்கள் மழைக்காக அங்கிருந்த குடிசையில் ஒதுங்கினர். பலத்த காற்று வீசியதால் குடிசை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் மீது குடிசை விழுந்து அமுக்கியது. அவர்கள் அபய குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.
சாவு
பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் காயம் அடைந்தவர்களை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுமதி (வயது 55) என்பவர் மட்டும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலாமணி (39), சாலம்மா (55) ஆகிய 5 பேர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மாதம்மாள் மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குடிசை சரிந்து விழுந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தோட்டத்தில் குடிசை சரிந்து விழுந்ததில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.