மகுடஞ்சாவடி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
மகுடஞ்சாவடி அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய தம்பி படுகாயம் அடைந்தார்.
இளம்பிள்ளை:
கல்லூரி மாணவர்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன்கள் சூர்யா (வயது 20), சாமுவேல் (19). இதில் சூர்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நரம்பியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சாமுவேல் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அண்ணன்- தம்பிகள் இருவரும் திருப்பூரில் இருந்து தர்மபுரி செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களுடன் நாய், ஆட்டுக்குட்டி ஆகியவற்றை வைத்திருந்தனர்.
பலி
மோட்டார் சைக்கிள் மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நொருக்கம்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய சாலையில் தாறுமாறாக ஓடியது. சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா, சாமுவேல் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்தனர். சூர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.