விராலிமலை அருகே பரிதாபம்: சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மீது கார் மோதியது; ஒருவர் பலி
விராலிமலை அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மீது கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். படுகாயம் அடைந்த 3 பெண்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கார் மோதியது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா பூதகுடி ஊராட்சி கல்குளத்துப்பட்டியை சேர்ந்த 4 பெண்கள் நேற்று இரவு 8 மணியளவில் மேலப்பச்சகுடி கலிங்கி அருகே இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தனர். இ.மேட்டுப்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தபோது திருச்சியில் இருந்து விராலிமலை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற 4 பெண்கள் மீதும் பயங்கரமாக மோதியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பூதகுடியில் உள்ள சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மற்றும் விராலிமலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெண் பலி
இதனால் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு வழித்தடத்திலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து 1 மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. பின்னர் ஒருவர் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மற்ற 2 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பூதகுடி கிராம நிர்வாக அலுவலர் லெட்சுமிகாந்தன், போலீஸ் துணை சூப்பிரண்டு செங்குட்டுவேலவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுங்கச்சாவடி மேலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








