மகளின் திருமணத்தன்று சோகம்: மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி பெண் பலி


மகளின் திருமணத்தன்று சோகம்: மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 12 Feb 2023 6:30 PM GMT (Updated: 2023-02-13T15:11:25+05:30)

குன்னம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் உள்பட 2 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பெரம்பலூர்

திருமணம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55), விவசாயி. இவரது மனைவி சிவஞானம் (50). இவர்களுடைய மகள் அமுதாவுக்கும், மருவத்தூர் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் நேற்று காலை சாத்தனூர் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் மறு வீடு வருவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை கவனிப்பதற்காக பெரியசாமி, சிவஞானம் மற்றும் பெரியசாமியின் சித்தப்பா முனியன் (75) ஆகியோர் சாத்தானூர் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் காடூர் கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.

பெண் பலி

அரியலூர்- திட்டக்குடி சாலையில் வெண்மணி மின்வாரிய அலுவலகம் அருகே ெசன்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த சிவஞானம் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, படுகாயம் அடைந்த பெரியசாமி, முனியன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் திருமணத்தன்று தாய் விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story