கொட்டாம்பட்டி அருகே புத்தாண்டில் பரிதாபம்: கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு


கொட்டாம்பட்டி அருகே புத்தாண்டில் பரிதாபம்: கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
x

கொட்டாம்பட்டி அருகே புத்தாண்டு தினமான நேற்று கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே புத்தாண்டு தினமான நேற்று கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கிணற்றில் குளித்தனர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டியன் (வயது 19). தெக்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருடைய கல்லூரி நண்பர் சுதாகர் (17). இவர்கள் இருவரும் கொட்டாம்பட்டி அருகே உள்ள பூமங்களபட்டியை சேர்ந்த மற்றொரு நண்பரான மகேஸ்வரனை (16) பார்க்க புத்தாண்டு தினமான நேற்று வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் காரியேந்தல்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளித்துள்ளனர். திடீரென எதிர்பாராத விதமாக குளித்து கொண்டிருந்த கார்த்திக் பாண்டியன் நீரில் மூழ்கியுள்ளார். அதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இது குறித்து கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய கார்த்திக்பாண்டியனை தேடினார்கள்.

கல்லூரி மாணவர் சாவு

ஒருபக்கம் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்த போதிலும் தீயணைப்புதுறையினர் தொடர்ந்து தேடும் பணி நடந்தது. பின்னர் மேலூர் தீயணைப்பு துறையினரும் வரவழைத்து தேடும் பணி தொடங்கியது. நண்பகல் வேளையில் மூழ்கிய வாலிபரை இரவு வரை போராடி சுமார் 8 மணி நேரத்திற்கு பின் கார்த்திக் பாண்டியனை பிணமாக மீட்டனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமாராணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story