உடுமலை வழியாக திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில்கள் இயக்கம்


உடுமலை வழியாக திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில்கள் இயக்கம்
x

உடுமலை வழியாக திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில்கள் இயக்கம் தொடங்கியது.

திருப்பூர்


உடுமலை வழியாக திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில்கள் இயக்கம் தொடங்கியது.

ரெயில் பாதை

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு முதல் தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல் வரையிலான ரெயில் பாதை முன்பு மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்தது. அதன் பிறகு இந்த ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த ரெயில்பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது உடுமலை வழியாக திருவனந்தபுரம்-மதுரைக்கிடையிலான அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு-சென்னை இடையிலான எக்ஸ்பிரஸ்,

பாலக்காடு-திருச்செந்தூர் இடையிலான ரெயில், கோவை-மதுரை இடையிலான ரெயில் ஆகிய ரெயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் மறுமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கோவையில் இருந்துஉடுமலை, மதுரை, ராஜபாளையம், தென்காசி வழியாக திருநெல்வேலிக்கும், அங்கிருந்து மறுமார்க்கத்தில் கோவைக்கும் வாரத்திற்கு ஒருநாள் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

பணிகள் நிறைவு

இந்த நிலையில் உடுமலை வழியாக திண்டுக்கல்-பாலக்காடு இடையிலான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் 28-ந் தேதி மின்சார என்ஜின் இணைக்கப்பட்ட ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரெயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து திண்டுக்கல்-பாலக்காடு இடையே மின்சார ரெயில்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மின்சார ரெயில்கள்இயக்கம் தொடங்கியது

அதன்படி இந்த வழித்தடத்தில் பாலக்காடு-திண்டுக்கல் இடையே மின்சார ரெயில்கள் இயக்கம் நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக மதுரைக்கு சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மின்சார என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை ஏற்கனவே மின்சார ரெயில் பாதை உள்ள நிலையில் தற்போது பாலக்காடு முதல் திண்டுக்கல் வரை ரெயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாலக்காடு முதல் உடுமலை வழியாக சென்னைக்கு டீசல் என்ஜின் இணைக்கப்பட்ட ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் மின்சார என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்படுவது நேற்று தொடங்கியது. இந்த ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை உடுமலைவழியாக பாலக்காடுக்கு சென்றது. இந்த 2ரெயில்கள் மட்டும் நேற்று மின்சார என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில்

நேற்று காலை பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு சென்ற ரெயில் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் வருகிற30-ம் தேதி முதல் மின்சார என்ஜின் இணைக்கப்பட்டு இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மின்சார ரெயில்கள் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். ரெயில் இயக்கத்திற்கான நேரம் மற்றும் எரிபொருள் செலவு குறையும்.டீசல்என்ஜினில் படிப்படியாகத்தான் வேகத்தைஅதிகரிக்கமுடியும்.ஆனால் மின்சார ரெயிலில் புறப்படும்போதே வேகத்தை அதிகரிக்க முடியும்.

திண்டுக்கல்-பாலக்காடு இடையிலான ரெயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மின்சார ரெயில்களை இயக்குவதற்கு 25ஆயிரம் வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படும். அதனால்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில் பாதை பகுதிகளில் மின்சார கம்பிகளைத்தொடவோ, நெருங்கவோ வேண்டாம் என்ற எச்சரிக்கை விளம்பர பலகைகள்ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story