தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,338 டன் உரம் வந்தன

ஒடிசா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,027 டன் டி.ஏ.பி. உரம், 331 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 1,338 டன் உரம் தர்மபுரி ரெயில் நிலையம் வந்தன. இந்த உரங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய அளவில் பிரித்து அனுப்பி வைக்க வேளாண்மை இணை இயக்குனர் விஜயா உத்தரவிட்டார். இதன்படி தர்மபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 76 டன் டி.ஏ.பியும், 20 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 70 டன் டி.ஏ.பியும், 25 டன் காம்ளக்ஸ் உரங்களும் பிரித்து அனுப்பப்பட்டன. இதேபோல் திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 60 டன் டி.ஏ.பி உரமும், தர்மபுரி மாவட்ட இருப்பு இடங்கில் 310 டன் டி.ஏ.பி உரமும், 130 டன் காம்ப்ளக்ஸ் உரமும், கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் 511 டன்டி.ஏ.பி உரங்களும், 136 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 2,923 டன்னும் டி.ஏ.பி 3,043 டன்னும், பொட்டாஷ் 811 டன்னும், காம்ப்ளக்ஸ் 4,668 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 395 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 11,840 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு மானிய விலையில் உரங்களை பெற்று பயனடையலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






