நஞ்சில்லா வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


நஞ்சில்லா வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 7 Oct 2023 12:45 AM IST (Updated: 7 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் நஞ்சில்லா வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்
ஆனைமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டு திட்டம் 2023-24-ல் நஞ்சில்லா வேளாண்மை குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மத்திய திட்டங்கள் வேளாண்மை துணை இயக்குநர் புனிதா தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சர்வதேச அங்ககசான்றிதழ் பெற்ற விவசாயி மணிவாசன் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காளியாபுரம், சின்னப்பம்பாளையம், அங்கலக்குறிச்சி ஆகிய கிராமங்கள் வேளாண்மை துறையினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், 3 வருட காலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கையான வேளாண் இடுபொருட்களை தங்கள் தோப்பிலேயே தயாரித்து தென்னை மற்றும் பிற பயிர்களுக்கு குறைந்த செலவில் பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியில் பி.ஜி.எஸ். வலைதளத்தில் விவசாயி பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்தும் விதை மற்றும் அங்கக சான்று அலுவலர் நந்தினி எடுத்துக்கூறினார். வட்டார விஞ்ஞானி முனைவர் சுதாலட்சுமி ஊடுபயிராக கோகோ, ஜாதிக்காய், தீவன மரங்கள் கிளிரிசிடியா, மிளகு, சணப்பு, தட்டை போன்றவற்றை பயிரிடுவதால் பூச்சி நோய்களின் தீவிரத்தினை மட்டுப்படுத்த முடியும் என கூறினார்.கோவை பல்கலைக்கழக நம்மாழ்வார் அங்கக வேளாண் மையத்திற்கு குழு விவசாயிகளை விரைவில் அழைத்துச் செல்வதாக ஆனைமலை வேளாண் உதவி இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.



Next Story