தர்மபுரியில் விவசாயிகளுக்கு பயிற்சி
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு மற்றும் புல் கரணைகள் வழங்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் பயிற்சி தர்மபுரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. தர்மபுரி ஆவின் பொது மேலாளர் காமராஜ் பயிற்சியை தொடங்கி வைத்தார். மேலாளர் குமரன், பால்வள துணைப் பதிவாளர் கோவிந்தசாமி, தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மணிமாறன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்.
இந்த பயிற்சியில் அரசின் திட்டங்கள், கால்நடைகளுக்கான சமச்சீர் தீவனம் அளித்தல், பசுந்தீவனத்தின் முக்கியத்துவம், பசுந்தீவன உற்பத்தி முறைகள், ஊறுகாய் புல் தயாரிப்பு, மேய்ச்சல் நிலம் பராமரிப்பு, பசுந்தீவன உற்பத்தி குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். அப்போது மையத்தில் உள்ள அசோலா மாதிரி பண்ணை, தீவன ஆலை, கால்நடை பராமரிப்பு கண்காட்சி, அனுமந்தபுரத்தில் உள்ள ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர். அப்போது கறவை மாடு தேர்வு செய்தல், ஆலம்பாடி மாட்டின பாதுகாப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விதை தொகுப்பு, இடுபொருட்கள் தொகுப்பு, தாது உப்பு கட்டி, பயிற்சி புத்தகம் மற்றும் கையேடு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.