பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி


பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

மின் ஆற்றல் சேமிப்பு, பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் மின்பகிர்மான வட்டம் சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மின்ஆற்றல் சேமிப்பு, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி ஆற்றல் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கன பயிற்சி வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நேற்று நடந்தது. வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், திட்ட அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பயிற்சியில், பள்ளிகளில் ஆற்றல் குழுவின் நோக்கங்கள் குறித்தும், பள்ளி மாணவ-மாணவிகளிடம் பள்ளி வளாகம், வீடு, வணிகநிறுவனங்கள், அலுவலகங்களில் மின்சாரம் சேமிப்பதன் நோக்கம் மற்றும் அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், செயற்பொறியாளருமான சாந்தி எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்ஆற்றல் சேமிப்பு தொடர்பான பதாகை அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story