2-ம் நிலை பெண் காவலர்களுக்கு பயிற்சி
வேலூர் கோட்டை மைதானத்தில் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
2-ம் நிலை காவலர்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர்களாக 3,497 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மதுரை, கோவை உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 273 பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 7 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக அவர்களுக்கு கவாத்து, யோகா, நன்னடத்தை, சட்டம், துப்பாக்கிகளை கையாளுதல், முதலுதவி அளித்தல், போலீஸ் நிலையங்களில் பணிபுரிவது, கணினிகளை கையாளுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
கலவரத்தை கட்டுப்படுத்த பயிற்சி
இந்த நிலையில் பெண் காவலர்களுக்கு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல், முற்றுகை மற்றும் இருதரப்பினர் இடையே வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி கோட்டை மைதானத்தில் நேற்று அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில் கலவரம் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை முதலில் அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்க வேண்டும். அவர்கள் செல்லாவிட்டால் லத்தி ஜார்ஜ் செய்வது, தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, புகைகுண்டு வீசுவது போன்றவற்றை செய்ய வேண்டும். அதன்பின்னரும் அவர்கள் கலையாவிட்டால் ரப்பர் குண்டு பயன்படுத்துவது, சட்ட விதிகளுக்கு உட்பட்டு துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அதில் காயமடைந்த போலீசார் மற்றும் கலவரகாரர்களுக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் ஏற்றுவது குறித்து தத்ரூபமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் காவலர் பயிற்சி பள்ளி முதன்மை கவாத்து போதகர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.