11 ஒன்றியங்களில் 4,128 ஆசிரியர்களுக்கு பயிற்சி
11 ஒன்றியங்களில் 4,128 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்றுத்தரும் ஆசிரியர்கள், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் இரண்டாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கான 3 நாள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல் பருவத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது 2-ம் பருவத்திற்கான பயிற்சி புத்தகங்கள் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி புத்தகத்திற்கான பயிற்சி தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-2025-ம் கல்வியாண்டில் 3-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள் புரிந்து வாசிக்க, எழுத மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளை தெரிந்திருக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் முன்னெடு்த்து செல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் இப்பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் 4,128 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, சீனிவாசன், மலர்கொடி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியை பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை பேராசிரியர் மகாலிங்கம் தலைமையில் கருத்தாளர்கள் அளித்தனர்.