பெண் குழந்தைகளை காப்பது குறித்து பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி
பெண் குழந்தைகளை காப்பது குறித்து பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூரில், தொடக்கக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சியானது நேற்று நடந்தது. பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அண்ணாதுரை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியைகளிடையே பெண் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் பொது நலம் குறித்து மாவட்ட பயிற்சி மருத்துவர் விவேகானந்தன் பேசினார். பெண் குழந்தைகள் குறித்த பாலியல் குற்றம் மற்றும் பொது குற்றம் சம்பந்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆசிரியைகளுக்கு விளக்கமளித்து பேசினார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து எந்த வகையில் எல்லாம் பிரச்சினை வரும் என்ற தலைப்பில் கருத்தாளர்கள் ரெஜினா, சுதா ஆகியோர் சுட்டிக்காட்டி பேசினர். மாவட்ட சமூக நலத்துறையை சேர்ந்த கீதா, பிரேமா ஆகியோர் மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் உதவி மையத்தின் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் குறித்து விளக்கி பேசினர். பெரம்பலூர் ஒன்றிய அங்கன்வாடி மேற்பார்வையாளர் அமுதராணி பெண் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாராம் குறித்து விளக்கமளித்தார். பயிற்சி வகுப்பில் அதிக பெண் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.