கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிரடிப்படை போலீசாருக்கு பயிற்சி

கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிரடிப்படை போலீசாருக்கு பயிற்சி நடந்தது.
விழுப்புரம்:
தமிழகத்தில் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட போலீசாருக்கும் ஹெல்மெட், ஷீல்டு, துப்பாக்கி, லத்தி, கயிறு, பாதுகாப்பு கவச உடைகள், கண்ணீர் புகை குண்டு, வஜ்ரா, வருண் வாகனங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் ஆய்வுக்கு உட்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் காலை விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் மேற்கண்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏதேனும் ஒரு பகுதியில் கலவரம் ஏற்படும்பட்சத்தில் அங்கு விரைந்து சென்று கலவரக்காரர்களை எவ்வாறு அப்புறப்படுத்தி கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து அதிரடிப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






