அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவியும் கட்டிக்காத்த அ.தி.மு.க.வை இன்று துரோகிகள் ஒழித்துக்கட்ட பார்க்கிறார்கள். அழித்து விட நினைக்கிறார்கள். அது நடக்காது. சதியால் கடந்த தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அந்த தடைக்கற்களை தற்போது உடைத்தெறிந்துள்ளோம்.

துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு நாம் கோவிலாக நினைக்கும் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்திருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் கொதித்து போய் இருக்கிறான். காவல் துறையும் துரோகிகளுக்கே துணை போய் கொண்டிருக்கிறது.

சீல் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தனி நபர் சொத்து கிடையாது. புரட்சித் தலைவர் உங்களுக்காக விட்டுச் சென்றுள்ள சொத்து. துரோகிகளின் செயலுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். அவரது கனவு, சூழ்ச்சி எடுபடாது. அவரை நம்பி யாரும் சென்று காலத்தை வீணாக்காதீர்கள். எனவே ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபடுவோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Next Story