திருநங்கை அப்சரா ரெட்டி அவதூறு வழக்கு: பிரபல யூடியூபருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


திருநங்கை அப்சரா ரெட்டி அவதூறு வழக்கு: பிரபல யூடியூபருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

அப்சரா ரெட்டி தற்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

சென்னை,

பிரபல ஆங்கில நாளிதழில் ஆசிரியராக இருப்பவர் அப்சரா ரெட்டி. திருநங்கையான இவர், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பெண்கள், திருநங்கைகள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறார். இவர் தற்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

இவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அதில், 'திருநங்கையான நான், ஆஸ்திரேலியாவில் பி.ஏ. இதழியல் பட்டமும், லண்டனில் எம்.ஏ. பொருளாதார பட்டமும் பெற்றுள்ளேன்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் என்னை சந்தித்து பேசினார். என்னுடன் பேட்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய விரும்புவதாக கூறினார். இதை நான் ஏற்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர், என்னைப்பற்றி அவதூறான கருத்துக்களை கூறி தனது யூடியூப் சேனலில் செய்தி வெளியிட தொடங்கி விட்டார்.

நடிகை மீரா மிதுனுக்கு பின்னால் இருக்கும் காங்கிரஸ் பிரமுகர் என்று கூறி வீடியோ வெளியிட்டார். இதன் பின்னர் அசிங்க அசிங்கமான குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவதூறான வீடியோக்களை வெளியிட்டதால், கடந்த 2020-ம் ஆண்டு நான் பங்கேற்க இருந்த 'பெண்கள் அதிகாரம்' என்ற மாநாடு ரத்து செய்யப்பட்டது.

இவர் செய்யும் இதுபோன்ற கொடுமையால், பலமுறை உளவியல் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே, என்னை அவதூறு செய்யும் ஜோ மைக்கேல் பிரவீன், ரூ.1 கோடியே 25 லட்சம் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவரோ, அவர் சார்பில் வக்கீலோ ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் திருநங்கைகளின் நலன் தொடர்பாக பல நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். எதிர்மனுதாரர் தன் யூடியூப் சேனலில், மனுதாரர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியுள்ளார். அதை பார்க்கும்போது, மனுதாரரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிட்டதாக நன்றாக தெரிகிறது.

ஒரு தனிநபரின் தனிப்பட்ட விஷயங்களை அவதூறு செய்யும்போது, அது சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மனுதாரருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், பல வீடியோக்களை எதிர்மனுதாரர் வெளியிட்டுள்ளார். இதனால், மனுதாரர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்மனுதாரரின் இந்த செயல், மனுதாரரை சமுதாயத்தில் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு ரூ.50 லட்சத்தை இழப்பீடாக எதிர்மனுதாரர் வழங்க வேண்டும். இந்த வழக்கில் 2-வது எதிர்மனுதாரராக யூடியூப் நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது.

மனுதாரருக்கு எதிரான அவதூறு வீடியோக்கள் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், 2-வது மனுதாரருக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. அதேநேரம், யூடியூப் நிறுவனம், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறு வீடியோக்களை பதிவேற்றம் செய்யவிடாமல் தடுப்பதற்கு தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என நீதிபதி தெரிவித்தார்.


Next Story