போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சம்பள நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், சி.ஐ.டி.யூ. கிளை செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டதை கண்டித்தும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள டி.ஏ. உயர்வை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.முன்னதாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதையடுத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் கிளை 1-ன் செயலாளர் கோபால், கிளை 2-ன் தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.