டிராவல்ஸ் ஊழியருக்கு கத்திக்குத்து


டிராவல்ஸ் ஊழியருக்கு கத்திக்குத்து
x

டிராவல்ஸ் ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருச்சி

கத்திக்குத்து

திருச்சி பாலக்கரை செங்குளம்காலனியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 24). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் விறகுமந்தை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், ராஜேஷ்கண்ணாவை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியால் குத்தியதாக அதேபகுதியை சேர்ந்த பாலாஜியை (28) கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது விற்ற 2 பேர் சிக்கினர்

*காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரதீப் குமார் எச்சரித்திருந்தார். இந்தநிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு நேற்று காலை முதல் மது விற்பனை நடந்தது. மதுபாட்டில்களை வாங்க மது பிரியர்களின் கூட்டம் கூடியது. இதையறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று மது விற்ற 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளசந்தையில் விற்க சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

*திருச்சி அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சில மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் யார்? என்பது தெரியவில்லை. மருத்துவமனையில் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதி என முகவரி கொடுத்து இருந்ததால் இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story