கோத்தகிரியில் காயமடைந்த சாரைப்பாம்புக்கு சிகிச்சை
கோத்தகிரியில் காயமடைந்த சாரைப்பாம்புக்கு சிகிச்சை
கோத்தகிரி
கோத்தகிரி ராம் சந்த் பகுதியில் இருந்து மிஷன் காம்பவுண்ட் செல்லும் சாலையோரத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு ஒன்று காயத்துடன் அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்தது. இதனை கண்ட விலங்கு ஆர்வலர்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வனக்காப்பாளர் லோகேஷ், பொன்னாமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் போட்டு எடுத்துச் சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் அந்த பாம்பிற்கு சிகிச்சை அளித்த பின் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் பாம்புக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு பாம்பு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. வாகனங்களில் செல்லும் போது சாலையில் பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.