பலத்த காற்றால் வேரோடு சாய்ந்த மரம்
காங்கயம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் காங்கயம் பகுதியில் நேற்று காலை முதல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. வேகமான காற்று காரணமாக காங்கயம் - குதிரை பள்ளம் சாலையில், அரசு பள்ளி மாணவ-மாணவி விடுதி அருகே சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊழியர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.