உப்பாறு ஓடையை ஆக்கிரமிக்கும் சீமை கருவேல மரங்கள்


உப்பாறு ஓடையை ஆக்கிரமிக்கும் சீமை கருவேல மரங்கள்
x
திருப்பூர்


குடிமங்கலம் ஒன்றியத்தில் உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பாறு ஓடை

குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறுசெல்கிறது. உப்பாறு ஓடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடை தூர்வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக புதர்மண்டி கிடக்கிறது.

சீமை கருவேல மரங்கள்

உப்பாறு ஓடையில் சில இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கழிவுகள், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் உப்பாறு ஓடை மாசடைந்து வருகிறது. நீர் வழித்தடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் குடிமங்கலம் ஒன்றியத்தில் உப்பாறு ஓடையில் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.

மழைக்காலங்களில் உப்பாறு ஓடையில் செல்லும் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே உப்பாறு ஓடையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story