கோவையில் அரசு பொருட்காட்சியை பார்த்து ரசித்த பழங்குடியின மக்கள்
கோவையில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
கோவையில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
ஆர்வத்துடன் பார்த்தனர்
கோவை மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைவாழ் குடியிருப்பு அதிகளவில் உள்ளது. இங்கு ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பலர் வனக்குழுவில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவர்கள் வனப்பகுதியை பாதுகாத்து வருவதுடன், கோவை மாவட்ட வனப்பகுதியில் உள்ள எல்லையை வகைப்படுத்தவும் உதவியாக உள்ளனர்.எனவே பழங்குடியின மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், கோவையில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் இலவசமாக பார்த்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் நேற்று அரசு பொருட்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
110 பழங்குடியின மக்கள்
கோவை மாவட்டத்தில் பில்லூர் அருகே உள்ள சித்துகுனை, பூச்சமரத்தூர், சிறுகிணறு, கெத்தைக்காடு, வீரகல், கடாமான்கோம்பை, மேல் பில்லூர், பர ளிக்காடு, நெல்லிமரத்தூர், குண்டூர், சொரண்டி, குறவன் கண்டி, எழுத்துக்கல்புதூர், கூடப்பட்டி, அரக்கடவு ஆகிய மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த 110 பழங்குடியின மக்கள் இந்த கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் இங்கு வந்து அரசுத்துறையில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதையும், இந்த பொருட்காட்சியில் வைக்கப்பட்டு உள்ள அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர். கோவை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வன உரிமை சட்டத்தில் உள்ள உரிமைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
நல்லுறவு
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியின் எல்லையை வரைந்து வரை படம் தயாரித்து கணக்கிடப் பட்டது. தற்போது தமிழகத்திலேயே முதன்முறையாக கோவை மாவட்டத்தில்தான் ஜி.பி.எஸ். உதவியுடன் வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. இதில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் வனக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள பழங்குடியின மக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4 மாதங்களில் பணிகள் முடிவடைந்து விடும்.இந்த பணியில் ஈடுபட அதிகாரிகள் செல்லும்போது, அவர்களை பார்த்து பழங்குடியின மக்கள் பயந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அதிகாரிகள், பழங்குடியின மக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோன்று பழங்குடியினத்தை சேர்ந்த போட்டித்தேர்வு எழுதுபவர் கள் அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக உணவு, டிக்கெட் வழங்கப் பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.