திருச்சி வங்கி அதிகாரி கொலை வழக்கில்மேலும் 2 பேர் கைது


திருச்சி வங்கி அதிகாரி கொலை வழக்கில்மேலும் 2 பேர் கைது
x

திருச்சி வங்கி அதிகாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கீரனூர் அருகே நடைபெற இருந்த இன்னிசை கச்சேரி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

வங்கி அதிகாரி கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 7-ந் தேதி இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஒடுகம்பட்டியை சேர்ந்தவரும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த ராஜ்குமார் மகன் விக்னேஸ்வரன் (வயது 29) என்பவரை ஒரு கும்பல் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த விக்னேஸ்வரனை அப்பகுதி மக்கள் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கீரனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விக்னேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படாமல் இருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஓ.பள்ளத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் ராமலிங்கம் (40) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

இந்தநிலையில் விக்னேஸ்வரன் கொலை வழக்கு தொடர்பாக ஓ.பள்ளத்துப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரஞ்சித் (24), ரெங்கன் மகன் ரஞ்சித் (33) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த சண்முகம், ரெங்கசாமி, கருப்பையா, ராஜ்குமார், ராமலிங்கம் ஆகிய 5 பேர் மீது கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விக்னேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் ஒடுகம்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

இன்னிசை கச்சேரி திடீர் நிறுத்தம்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கீரனூர் அருகே உள்ள குளத்தூர் காந்தி நகரில் நேற்று இரவு இன்னிசை கச்சேரி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேடைகள், ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்த நிலையில் போலீசார் திடீரென அனுமதி மறுத்து நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என தடை விதித்தனர். இதனை தொடர்ந்து மேடைகள் அகற்றப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.


Next Story