திருச்சி மாவட்ட செய்தி சிதறல்


திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
x

திருச்சி மாவட்ட செய்தி சிதறல்

திருச்சி

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

திருச்சியை அடுத்த, நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் திருமலை நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 32). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் வீட்டிற்கு மீண்டும் வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்வையிட்டபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம ஆசாமிகள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

பா.ஜனதா பிரமுகர் கைது

*திருச்சி மேலச்சிந்தாமணியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) பா.ஜனதா இளைஞரணி பிரமுகரான இவர் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திருச்சி வருகையின்போது, பட்டாசு வெடித்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் நேற்று அவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

ஓடும் பஸ்சில் பணம் பறிக்க முயன்ற சிறுவன் கைது

*திருச்சி ராம்ஜி நகர் நவலூர் கொட்டப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (27). இவர் சென்னை செல்வதற்காக ராம்ஜி நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு டவுன் பஸ்சில் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.300-ஐ 17 வயது சிறுவன் திருட முயன்றான். கனகராஜ் சக பயணிகள் உதவியுடன் அவரை பிடித்து கன்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.

ஊராட்சி மன்ற தலைவருக்கு மிரட்டல்

*புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நளினி (42). இவரை முன்விரோதத்தில் அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி உள்ளார். இதனை தட்டிக்கேட்ட நளினியின் கணவர் ரவிச்சந்திரனை தாக்கி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

2½ கிலோ கஞ்சா

*திருச்சி கே.கே.நகர். ஐயப்பன் நகர் பகுதிகளில் கஞ்சா விற்றதாக விஜய், பிரவீன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

102 மதுபாட்டில்கள் பறிமுதல்

*வையம்பட்டியை அடுத்த ஒத்தகடை டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த ஷேக் இப்ராஹிம் (27) என்பவரை வையம்பட்டி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 22 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதே போல் வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில் விற்ற கருணாம்பட்டியை சேர்ந்த மதுரை வீரன் (42) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story