திருச்சி மாவட்ட செய்திசிதறல்
திருச்சி மாவட்ட செய்திசிதறல்
வீடு புகுந்து திருட்டு
திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் தோப்பு குளம் பகுதியை சேர்ந்தவர் வேல்தாஸ் (வயது 38). ஓட்டல் தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் இவருடைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த வாலிபர் வீட்டில் இருந்த ரூ.24 ஆயிரத்து 500-ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். அப்போது, மதியம் சாப்பிடுவதற்காக வேல்தாஸ் வீட்டுக்கு வந்த போது, அந்த வாலிபர் வீட்டுக்குள் இருந்து வருவதை பாா்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவரை உறையூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த விக்னேஷ்வரன் (35) என்பது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, விக்னேஷ்வரனிடம் இருந்து பணத்தை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
*திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகள் முருகேஸ்வரி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற முருகேஸ்வரி, மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் தில்லைநகர் தென்னூர் ஜெனரல் பஜார் பகுதியை சேர்ந்த ஷேக் அலாவுதீன் மகள் நஸ்ரின் (22) என்பவரும் மாயமானார். பி.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் திருமணத்துக்கு நஸ்ரின் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் மாயமானார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் மடிக்கணினி, பணம் திருட்டு
*மதுரை ஜெய்கிந்த்புரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி அமிர்தவர்ஷினி (27). இவர் மதுரைக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த, மடிக்கணினி, ரூ.2,300 வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 கிலோ கஞ்சா கடத்தல்
*திருச்சி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் ஸ்ரீரங்கம் பஸ்நிலையம் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி சீனிவாச நகர் கனரா வங்கி காலனியை சேர்ந்த சீனிவாசாரத்தினம் (49), தர்மபுரி குமாரசாமிபேட்டை அப்பாவு நகரை சேர்ந்த சீனிவாசன் (55) என்பது தெரியவந்தது. ஸ்கூட்டரை சோதனை செய்த போது, அதில் 22 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா, ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
*திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக காட்டூர் பிலோமினாள்புரம் பகுதியைச் சேர்ந்த மவுலி ராஜ் (36) என்பவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.