இஸ்ரேலில் சிக்கித்தவித்த திருச்சி பேராசிரியை ஊர் திரும்பினார்; உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்


இஸ்ரேலில் சிக்கித்தவித்த திருச்சி பேராசிரியை ஊர் திரும்பினார்; உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்
x

இஸ்ரேலில் சிக்கித்தவித்த திருச்சி பேராசிரியை ஊர் திரும்பினார். அவரை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

திருச்சி

இஸ்ரேலில் போர்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 7-ந் தேதி முதல் நடக்கும் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி கருமண்டபம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உழவியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சொட்டு நீர்ப்பாசனம் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள கடந்த மாதம் 23-ந் தேதி 2 மாத பயிற்சிக்காக இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இந்நிலையில் அங்கு திடீரென போர் தொடங்கியுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியை ராதிகா உள்பட இந்தியாவை சேர்ந்த பலர் அங்குள்ள பதுங்கு குழியில் பதுங்கி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு, அவரது கணவர் ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லிக்கு அழைத்து வந்தனர்

இதற்கிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதில் ஏற்கனவே 3 கட்டமாக விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 4-வது கட்டமாக விமானம் மூலம் 274 இந்தியர்கள் நேற்று முன்தினம் காலை புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானத்தில் பேராசிரியை ராதிகாவும் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் நேற்று காலை விமானத்தில் சென்னை வந்தார். இதைத்தொடர்ந்து அவரது கணவர் ரமேஷ் மற்றும் உறவினர்கள் சென்னைக்கு சென்று கண்ணீர் மல்க அவரை வரவேற்று, பின்னர் திருச்சிக்கு காரில் அழைத்து வந்தனர்.

போர் அபாய ஒலி

திருச்சி வந்த பேராசிரியை ராதிகா இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இஸ்ரேலில் நான் அங்கு சென்ற 3-வது வாரத்திலேயே போர் தொடங்கியது. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் போர் நடைபெற்றது. தொடர்ந்து குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இஸ்ரேல் அரசு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக அபாய ஒலியை எழுப்பும். அப்போது அனைவரும் பாதுகாப்பாக அங்குள்ள பதுங்கு குழிக்குள் சென்று தங்கி கொள்வோம். நிலைமை சரியானவுடன் மீண்டும் நாங்கள் தங்கியுள்ள அறைக்கு வந்துவிடுவோம்.

மளிகை பொருட்கள்

அங்கு நாங்கள் ஒரு வித பயத்திலேயே இருந்து வந்தோம். அங்கு போர் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வீட்டிற்கு பேசுவதற்கு செல்போன் சிங்னல் இல்லாமல் தவித்தோம். இருந்த போதிலும் நான் பயிற்சிக்கு வந்த பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு உதவியாக இருந்தனர். அவர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சமைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். இதில் மளிகை பொருட்கள் இருப்பவர்கள் சமைத்து சாப்பிட்டு வந்தனர். சிலர் அங்குள்ள உதவும் அமைப்பினரிடம் குறுஞ்செய்தி அனுப்பி மளிகை பொருட்களை வரவழைத்தனர். இஸ்ரேல் அரசாங்கம் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது. இந்தியா தூதரகம் எங்களை குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலம் எங்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். தமிழக அரசு தமிழகத்தை சேர்ந்தவர்களை வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி அதில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தனர். இஸ்ரேலில் இருந்து எங்களை மீட்டு வந்த இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story