விபத்தில் திருச்சி வாலிபர் சாவு; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
ஆலங்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த திருச்சி வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் இந்த விபத்தில் ஜல்லிக்கட்டு காளையும் இறந்தது.
சரக்கு ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் கடந்த 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி மணப்பாறை பகுதியிலிருந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளுடன் 7 பேர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் சரக்கு ஆட்டோவில் காளைகளை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆலங்குடி அருகே உள்ள வம்பன் பகுதியில் சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் சரக்கு வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 காளைகள் பரிதாபமாக இறந்தன. மற்றொரு காளை படுகாயம் அடைந்தது. மேலும் சரக்கு வேனில் இடிபாடுகளில் சிக்கி பூலாங்குளத்தை சேர்ந்த டிரைவர் விக்கி (வயது 30), காளைகளை அழைத்து வந்த செவலூரை சேர்ந்த மதியழகன் (25) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
திருச்சி வாலிபர் பலி
இதையடுத்து, விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் காளைக்கும் கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறையை சேர்ந்த தர்ம அழகு (30) என்பவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தர்ம அழகு நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.இதேபோல் படுகாயம் அடைந்த ஜல்லிக்கட்டு காளையும் சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்த விபத்து குறித்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.