திருச்சி: மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலி - போலீஸ் விசாரணை
திருச்சி அருகே திருப்பராய்த்துறையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள திருப்பராய்த்துறையை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவருடைய மனைவி தனலட்சுமி(வயது 52).இவர் நேற்று காலை வீட்டில் உள்ள குப்பையை கொட்டுவதற்காக திருச்சி- கரூர் மெயின் மெயின் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு விராலிமலையை சேர்ந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தனலட்சுமி மீது வேகமாக மோதியது.இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.