இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் பீடி இலைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் பீடி இலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1¼ டன் கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, வெங்காய விதை, மஞ்சள், கடல் அட்டை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைg;பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது சிலரை கைது செய்தும் வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

விலை உயர்வு

சமீபகாலமாக இலங்கையில் பீடி இலையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் 1 கிலோ பீடி இலை, இலங்கையில் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பீடி இலை கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் ஏட்டு திருமணி, முத்துப்பாண்டி, சாமுவேல், செந்தில், மகாலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடற்கரை பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது, அங்கு ஒரு லோடு ஆட்டோ வந்தது. அதில் இருந்த மூட்டைகளை சிலர் படகில் ஏற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு மறைந்து இருந்த போலீசார் விரைந்து சென்று அந்த லோடு ஆட்டோவை மறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 25 கிலோ எடை கொண்ட 49 மூட்டைகளில் மொத்தம் 1¼ டன் கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து லோடு ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை, லோடு ஆட்டோ மற்றும் பிடிபட்ட டிரைவரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story